வெள்ளி, 27 ஜனவரி, 2012

இலங்கை உற்பத்தி பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பு


 
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அட்டூழியம்

வேதாரண்யம்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாகை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மீனவர்கள் தங்கி மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
இதில், சீர்காழி தாலுக்கா பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, கொடுவாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஏழு படகுகளில் மீன்பிடிக்க நேற்று முன்தினம் காலை சென்றுள்ளனர்.
மீனவர் பிச்சாவரம் (40) என்பவக்குச் சொந்தமான படகில் இவரும், திருவருள் (31) மணிகண்டன் (21) விமல் (23) ஆகியோரும், ராமசாமி (45) என்பவருடைய படகில் இவரும் பாப்பையன் (35) லெட்சுமணன் (40) குட்டியாண்டி (30) ராஜேந்திரன் (35) ஆகியோரும், நடராஜன் என்பவது படகில் தேவதாஸ் (20), மாயகிருஷ்ணன் (50) கவியரசன் (20 ஆகியோர் கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, புதிய யமஹா படகில் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத (மீனவர்கள் அல்ல), 10 பேர் தமிழக மீனவர்கள் படகை சூழ்ந்து கொண்டு கத்தியை கழுத்தில் வைத்து காட்டி மிரட்டி பெல்டால் அடித்துள்ளனர்.
இவர்கள் படகில் இருந்த மீன்கள், திசைக்காட்டும் கருவி, மீன்பிடிப்பதற்காக வைத்திருந்த பெரிய தூண்டில் முள், ஐஸ்பாக்ஸ், மொபைல்ஃபோன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதையடுத்து பெருத்த ஏமாற்றத்துடன் தமிழக மீனவர்கள் வெறுங்கையுடன் நேற்று மாலை கோரடியக்கரை திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
க்யூ பிராஞ்ச் தனிப்பிரிவு போலீஸார், வேதாரண்யம் கடற்கரை போலீஸார் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே உறவினர் ராமேஸ்வரம் வந்த போது எழுந்த பிரச்னையை தொடர்ந்து தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்ட வேண்டாம் என்றும், ஜாக்கிரதையாக இருக்குமாறும் மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தது.
பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியதாவது:
நாங்கள் இந்திய கடல் பகுதியில் மட்டும் தான் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். திடீரென புதிய போட்டில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்தவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றனர்.
எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நாள்தோறும் தொடர்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எங்கள் குடும்பங்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது.
இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.

பழநி கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்


பழநி: அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மார்கழி மாதம் துவங்கியது முதல் சென்னை, ஈரோடு, மதுரை, தேனி, திருப்பூர், மற்றும் அறுபடை வீடுகள் கொண்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் 500 கி.மீட்டர் தொலைவுக்கும் அப்பால் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தைத்திங்கள் பொங்கல் திருநாளில் இன்ற லட்சக்கணக்கானவர்கள் பழநி நோக்கி புறப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தேவையான வசதிகள் செய்து கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செம்பட்டி, மூலச்சத்திரம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மெகா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் ஓய்வெடுத்து கொள்ளலாம். இரவு நேரத்தில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகிறது. ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது. பழநி திண்டுக்கல் ரோட்டில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காவி, பச்சை, மஞ்சள் <உடைகள் அணிந்த பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கின்றனர்.

வரும் பிப்- 7 ம் தேதி தைப்பூசம்: இங்கு வரும் பிப் 7 ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதற்கென பிப்- 1 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விலை வீழ்ச்சியால் "வாடும்' மஞ்சள் விவசாயிகள்: பொங்கல் பண்டிகை விற்பனையிலும் ஏமாற்றம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டை விட மஞ்சள் இரட்டிப்பாக பயிர் செய்த நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 

பொங்கல் பண்டிகை உள்ளூர் விற்பனையை குறி வைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பருவ மழை, சந்தையில் விளை பொருட்களுக்கு உள்ள விலை நிலவரங்கள் அடிப்படையில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.கடந்தாண்டில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததோடு, பொங்கல் பண்டிகையின் போது, மஞ்சள் கொத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் கடந்தாண்டு விரளி மஞ்சள் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை, 15 ஆயிரத்து 268 ரூபாயும், கிழங்கு மஞ்சள், 15 ஆயிரத்து 631 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்தாண்டில் மஞ்சளுக்கு நல்ல வரவேற்பும், விலையும் ஏற்றத்தில் இருந்ததால், இந்தாண்டு தர்மபுரி மாவட்டத்தில் வழக்கத்தை விட விவசாயிகள், 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மஞ்சள் பயிர் செய்தனர். தற்போது அறுவடை பருவத்தில் வயல்களில் மஞ்சள் பயிர் உள்ளது.

ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்தில் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு செல்லும். இந்தாண்டும் விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஈரோடு சந்தையில் கடந்த வார நிலவரப்படி விரளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம், 4,671, குறைந்த பட்சம் 3,900 ரூபாய்க்கும், கிழங்கு அதிகபட்சம், 4,479, குறைந்த பட்சம் 3,670 ரூபாய்க்கும் விற்பனை விலை இருந்தது.கடந்தாண்டை விட இந்தாண்டு, 60 முதல், 80 சதவீதம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். 

விலை ஏற்றத்தை குறி வைத்து பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மஞ்சள் அறுவடை செய்யாமல் வைத்துள்ளனர்.பொங்கல் பண்டிகை மஞ்சள் கொத்து, உள்ளூர் விற்பனையை எதிர்பார்த்த போதும், டிசம்பரில் அறுவடை செய்யும்படி சாகுபடி செய்ய மஞ்சள் வயல்களில் இலைகள் சருகாகி காய்ந்த நிலையில் இருப்பதால், உள்ளூர் சந்தை விற்பனையிலும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் ஈரோடு சந்தையில் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து செல்வர். இடைத்தரகர்களுக்கு, 10 முதல், 15 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்பதால், சிறு விவசாயிகள் மஞ்சள் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

தானே புயல் பாதிப்பு: கடலூர் மக்களுக்கு விஜய் உதவி!

தானே புயல் பாதிப்பு: கடலூர் மக்களுக்கு விஜய் உதவி!தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு அரிசி வழங்கி உதவினார் நடிகர் விஜய். கடலூரில் புயலால் பாதித்தவர்களில் 2,500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். கடலூர் கம்மியம்பேட்டை திறந்தவெளித் திடலில் பயனாளிகள் 2,500 பேர் மட்டுமன்றி நடிகர் விஜய்யை பார்க்கச் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான மக்கள் காலை 10 மணி முதலே திரண்டனர்.

பகல் 1.14 மணிக்கு மேடைக்கு வந்த நடிகர் விஜய், தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் என்னிடம் கூறினர். அவர்களிடம், உங்களை சந்திக்க ஏற்பாடு செய்யக் கூறினேன். குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். புயலால் பாதித்த உங்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு சிறிய உதவி செய்துள்ளேன். அனைவருக்கும் ஹேப்பி பொங்கல் நண்பன் பொங்கல் என பேசிவிட்டு, ஐந்து பயனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி பையை கொடுத்தார்.

பகல் 1.20 மணிக்கு மேடையிலிருந்து இறங்கி காரில் ஏறிய போது மக்கள் தடுப்புக் கட்டைகளை முறித்துக் கொண்டு சூழ்ந்தனர். கூட்ட நெரிசலில் விஜய் காரின் பின்னால் நின்றிருந்த மற்றொரு கார் கண்ணாடி உடைந்தது. அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நடிகர் விஜய் கார் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன்பிறகு ரசிகர் மன்றத்தினர் பயனாளிகளுக்கு அரிசி பை வழங்கினர்.

நண்பன் படத்திற்கு எதிர்ப்பு : தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்!

நண்பன் படத்தில் ஐ.ஜே.கே., கட்சி தலைவர் பச்சமுத்துவை பற்றி இழிவான வசனம் இடம்பெற்றதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சியினர், தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது. சேலம் நகரில், 11 தியேட்டர்களில், நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குவிந்தனர். எங்கள் தலைவர் பற்றிய இழிவான வசனத்தை நீக்க வேண்டும் எனக்கூறி தியேட்டர் முன் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில், கட்சியினர் சிலர், ஆத்திரத்தில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி வெளியே இழுத்து வந்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் போலீஸார், தியேட்டர் முன் குவிக்கப்பட்டனர். பதட்டம் அதிகரித்ததையடுத்து, தியேட்டரில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என, தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை தொடர்ந்து ‌போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறின