செவ்வாய், 20 மே, 2014

இலங்கை மீன் வளத்தை இந்தியா சுரண்டினால் சர்வதேச உதவியை நாடுவோம்

கொழும்பு : இலங்கை மீன் வளத்தை இந்தியா சுரண்டினால், இப்பிரச்னையை சர்வதேச அமைப்பின் உதவியை நாடுவோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கூறியுள்ளார்.  மீனவர் பிரச்னை தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 70 நாள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பினரும் அடுத்த மாதம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கொழும்புவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கையின் மீன்வளத்தை யாராவது சுரண்ட முயற்சித்தால், இப்பிரச்னை தீர்க்க சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புகிறேன்.’’ என்றார்.

ஜெயலலிதா பங்கேற்காதது மகிழ்ச்சி
இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், ஊடக அமைச்சருமான கெகலியா ராம்புக்வெல்லா கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் பா.ஜ கட்சி தனிப்பெரும்பான்மையுடன், எந்த கட்சியையும் சாராமல் வலுவான ஆட்சி அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்சி 37 இடங்களில் வென்றாலும், மத்தியில் எந்த நிர்பந்தமும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார். இதனால் தமிழகத்தின் வற்புறுத்தல் இல்லாமல் மத்திய அரசால் முடிவெடுக்க முடியும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக